மதுரை:
டி.டி.வி.தினகரனை ஆதரித்து தனி அணியாக செயல்பட்ட 19 எம்.எல்.ஏ.க்கள், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வரும் ஆதரவை திரும்ப பெறுவதாக கவர்னரிடம் கடிதம் கொடுத்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக 19 எம்.எல்.ஏ.க்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் தனபாலுக்கு அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்தார். இதனை ஏற்று 19 எம்.எல்.ஏ.க்களும் விளக்கம் அளிக்க சபாநாயகர் நோட்டீசு அனுப்பினார்.
கடந்த 14-ந்தேதி வரை இதற்கு கெடு விதித்திருந்த போதும் தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் நேரில் வந்து விளக்கம் அளிக்கவில்லை. இதற்கிடையே அந்த அணியில் இருந்த ஜக்கையன் எம்.எல்.ஏ. முதல்வர் எடப்பாடி அணிக்கு மாறிவிட்டார்.
இந்த நிலையில் விளக்கம் அளிக்காத 18 எம்.எல்.ஏ.க்களை கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் இன்று உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சபா நாயகரின் உத்தரவு தொடர்பாக நீதிமன்றத்தை நாடபோவதாக தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சபாநாயகரின் உத்தரவு சரியானது தானா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-
கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது பற்றிய முழு விவரங்களும் அரசியல் சட்டத்தின் 10-வது அட்டவணையிலும், தமிழக சட்டப்பேரவையின் உறுப்பினர் தகுதியிழப்பு விதிகள் 1986-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு உறுப்பினர் தகுதி இழப்புக்கு மனு கொடுக்கலாம். அதன் மீது சபாநயகர் எப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று முழுமையாக விதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. கொறடாவிடம் தெரிவிக்காமல் கவர்னரை சந்தித்து மனு கொடுத்தனர் என்பதற்காக அவர்கள் கட்சியில் இருந்து விலகி விட்டனர் என கூற முடியாது. இதுகுறித்து கொறடா கொடுத்த மனு தவறானது.
எனவே 18 எம்.எல்.ஏ.க் கள் தகுதி நீக்கத்திற்கான காரணம் சரியானதல்ல. கட்சித்தாவல் சட்டப்படி தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. இது இயற்கை நியதிக்கு எதிரானது.
தமிழக அரசு பெரும் பான்மையை நிரூபிக்க குறுக்கு வழியில் இறங்கி உள்ளது. நியாயமாக பார்க்க போனால் ஓ.பி.எஸ். அணி மீதுதான் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இந்த பிரச்சினையில் சபாநாயகர் மட்டுமல்லாமல் முதல்-அமைச்சர், அரசு கொறடா ஆகியோரும் நீதிமன்ற கண்டனத்துக்கு ஆளாகநேரிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.