நெல்லை:
நெல்லை அருகே உள்ள கீழ வீரராகவபுரத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 55). பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள தனியார் பஸ் நிறுவன அதிபர் சோமசுந்தரம் என்பவரின் வீட்டில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.
இந்த வீட்டில் மேலும் பாதுகாப்புக்காக வெளிநாட்டு நாயும் வளர்க்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் வீட்டின் உரிமையாளர் குடும்பத்துடன் வெளியே சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த காவலாளி பன்னீர்செல்வம், வீட்டின் முன்பக்க கேட் அருகே நேற்று காலை மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது தலையில் ரத்தக்காயம் இருந்தது.
இதைக்கண்ட அந்த பகுதி மக்கள், பன்னீர்செல்வத்தை நாய் கடித்து கொன்று விட்டதாக கருதினார்கள். உடனடியாக பெருமாள்புரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பன்னீர்செல்வத்தின் உடலை மீட்க முயன்றனர்.
ஆனால், உடலை எடுக்க விடாமல் சுற்றி வந்த நாய் ஆக்ரோஷமாக குரைத்தது. சுமார் 2 மணி நேரம் போராடியும் காவலாளி உடலை மீட்க முடியாததால், சுருக்கு கயிற்றை நாயின் கழுத்தில் போட்டு அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக கயிறு இறுக்கியதில் நாய் செத்தது.
பின்னர் பன்னீர்செல்வத்தின் உடலை போலீசார் மீட்டனர். கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு அவர் இறந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இருப்பினும், அவர் எப்படி இறந்தார்? என்பது உடல் பரிசோதனைக்கு பின்புதான் தெரியவரும் எனக்கூறிய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.