ரெயிலில் வந்த தண்ணீர் 
செய்திகள்

2-வது ரெயிலில் வந்த தண்ணீர் - திருவல்லிக்கேணி, ராயபுரம் பகுதி மக்களுக்கு சப்ளை

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு 2-வது முறையாக கொண்டுவரப்பட்ட தண்ணீர் திருவல்லிக்கேணி, ராயபுரம் பகுதி மக்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது.

மாலை மலர்

சென்னை நகர மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ஜோலார்பேட்டையில் இருந்து ரெயில் மூலம் தண்ணீர் கொண்டுவர தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

கடந்த 12-ந்தேதி 25 லட்சம் லிட்டர் தண்ணீர் ஜோலார்பேட்டையில் இருந்து ரெயில் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. அந்த தண்ணீர் வில்லிவாக்கம் ரெயில் நிலையத்தில் இருந்து குழாய் மூலம் கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பப்பட்டது. அங்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் சென்னை மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து தலா 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 50 டேங்கர்களுடன் 2-வது ரெயில் நேற்று மதியம் வில்லிவாக்கம் வந்தது. இதில் உள்ள 25 ஆயிரம் லிட்டர் தண்ணீர் அங்கிருந்து குழாய் மூலம் கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு போகப்பட்டது. அங்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய் வழியாகவும், லாரிகள் மூலமும் சென்னை நகருக்கு வினியோகம் செய்யப்படுகிறது.

இந்த ரெயில் தண்ணீர் குழாய் மூலம் அயனாவரம், அண்ணாநகர், கீழ்ப்பாக்கம் பகுதிகளுக்கு குழாய் மூலம் வினியோகம் செய்யப்பட்டது. இதுதவிர திருவல்லிக்கேணி, ஐஸ்ஹவுஸ், ராயபுரம் பகுதிகளுக்கு லாரி மூலமும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சென்னை குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ஜோலார்பேட்டையில் இருந்து ரெயில் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. ஒரு ரெயிலில் தண்ணீர் நிரப்புவது ரெயில் பயணம் ஆகியவற்றுக்கு 13 மணி நேரம் ஆகிறது. முதல் கட்டமாக தினமும் 2 ரெயில்கள் மூலம் 50 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.

படிப்படியாக தினமும் 1 கோடி லிட்டர் தண்ணீர் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.