ராட்சத அலைகளுடன் கடல் ஆர்ப்பரிப்பதை படத்தில் காணலாம். 
செய்திகள்

கொச்சி அருகே ஊருக்குள் கடல்நீர் புகுந்ததால் பரபரப்பு: ராட்சத அலைகள் எழுந்ததால் பொதுமக்கள் ஓட்டம்

கொச்சி அருகே ராட்சத அலைகளுடன் ஊருக்குள் கடல்நீர் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மீண்டும் சுனாமி வந்துவிட்டதாக நினைத்து பொதுமக்கள் ஓட்டம் பிடித்தனர்.

மாலை மலர்

திருவனந்தபுரம் :

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சி அடுத்த கடற்கரைப்பகுதிகளான செல்லனம், வைப்பின், நாயாரம்பலம், எடவனக்காடு கடற்பகுதியில் நேற்று முன்தினம் கடல் தொடர்ந்து சீற்றமாக இருந்தது. இதற்கிடையே திடீரென்று கடல்நீர் கொந்தளித்து அங்கிருந்த கிராமங்களுக்குள் புகுந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்தது. கடல்நீர் தடுப்பு சுவர்களை உடைத்துக்கொண்டு புகுந்ததால், பதறிப்போன கிராம மக்கள் செய்வதறியாது தவித்தனர். பின்னர் இருட்டிவிட்டதால் அனைவரும் தூங்க சென்றுவிட்டனர்.

இந்தநிலையில் அந்த பகுதியில் நேற்றும் ராட்சத அலைகளுடன் கடல்நீர் ஊருக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மீண்டும் சுனாமி வந்துவிட்டதாக நினைத்து பொதுமக்கள் அச்சம் அடைந்து உயரமான இடங்கள் மற்றும் மாடிகளுக்கு குழந்தைகளுடன் ஓடினர்.

இதில் நாயாரம்பலம் கடற்கரை பகுதியில் பிரசாத் என்பவரின் வீடு கடல் சீற்றத்தால் முழுமையாக இடிந்து போனது. புனித அந்தோணியார் தேவாலயத்துக்கு பின்னால் உள்ள கடல் சுவர் இடிந்து அதன் வழியாக கடல் நீர் புகுந்தது. இதற்கிடையே ரூ.20 லட்சம் செலவில் கடல் கொந்தளிக்கும் சமயங்களில் கடல்நீர் ஊருக்குள் புகுந்து விடாமல் தடுக்க ஜியோபாக் என்ற பெயரில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று வீசிய அலையில் ஜியோபாக் தடுப்புச்சுவரும் அடித்து செல்லப்பட்டு விட்டது.

இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட 1,500-க்கும் மேற்பட்டோர் அந்த பகுதியில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:-

“கேரளாவில் ஒக்கி புயல் ஏற்பட்டபோது கூட கடல்அலையில் இந்தளவு சீற்றம் காணப்படவில்லை. எங்கள் வாழ்நாளில் நாங்கள் கண்ட மிகப்பெரிய அலைகள் இதுதான். மாநிலத்தில் கொரோனா காரணமாக பல்வேறு விதிமுறைகளுடன் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கும் இந்த சூழ்நிலையில் கடல்அலையும் கொரோனாவுடன் கை கோர்த்து பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.”

இவ்வாறு அவர்கள் கூறினர்.

வீடுகள் மற்றும் கழிப்பறைகளுக்குள்ளும் கடல்நீர் புகுந்ததால் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் தொற்றுநோய் பரவும் அபாயமும் இருப்பதால் மாவட்ட நிர்வாகம் சுகாதார பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.