செய்திகள்

ரெயில் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்தால் ‘பாஸ்’ ரத்து: கோட்ட பாதுகாப்பு ஆணையர்

ரெயில் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்பவர்களின் பாஸ் ரத்து செய்யப்படும் என கோட்ட பாதுகாப்பு ஆணையர் லூயிஸ் அமுதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மாலை மலர்

சென்னை:

சென்னை சென்ட்ரல் மற்றும் கடற்கரை புறநகர் ரயில் நிலையங்களில் இருந்து தினமும் மின்சார ரயில்கள் 300-க்கும் மேற்பட்ட முறை இயக்கப்படுகின்றன. இதில், தினமும் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.

இதில், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் பெரும்பாலோனோர் படிக்கட்டுகளில் நின்று கொண்டே பயணம் செய்கின்றனர். இதனால், பல உயிரிழப்புகளும் நடக்கின்றன. இந்நிலையில், கோட்ட பாதுகாப்பு ஆணையர் லூயிஸ் அமுதன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ரெயில் படிக்கட்டுகளில் பயணம் செய்யும் கல்லூரி மாணவர்களின் பயண அட்டை ரத்து செய்யப்படும். இதற்கான பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அவ்வாறு பயணம் செய்பவர்களை வீடியோ எடுத்து பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகத்திடம் அனுப்பப்படும், அவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.