நகை கடைக்கு சீல் 
செய்திகள்

நாகர்கோவிலில் அனுமதியின்றி செயல்பட்ட கவரிங் நகை கடைக்கு சீல்

நாகர்கோவிலில் முறையான கட்டிட அனுமதியின்றி கவரிங் நகை கடை ஒன்று செயல்பட்டு வந்தது. இது பற்றி மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.

மாலை மலர்

நாகர்கோவில்:

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் விதிகளை மீறி அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சீல் வைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் எதிரே செயல்பட்ட நகை கடை உள்பட சில கடைகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீல் வைக்கப்பட்டது. மேலும் அந்த கடைகளை திறக்க அனுமதி மறுக்கப்பட்டதால், கடைகளின் உரிமையாளர்கள் அவற்றை இடித்து சீரமைத்து வருகிறார்கள்.

இது போல மாநகராட்சி பகுதிக்குள் விதி மீறலில் ஈடுபட்ட கட்டிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை சீல் வைக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும் ஆக்கிரமிப்பு கட்டிடங்களும் இடிக்கப்பட்டு வருகிறது. சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலைகளை விரிவுப்படுத்தும் பணிகளும் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த நிலையில் நாகர்கோவில் செம்மாங்குடி ரோட்டில் முறையான கட்டிட அனுமதியின்றி கவரிங் நகை கடை ஒன்று செயல்பட்டு வந்தது. இது பற்றி மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.

இதைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் அந்த கடையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் அந்த கடையை அகற்ற நோட்டீசும் மாநகராட்சி சார்பில் அனுப்பப்பட்டது.

3 முறை நோட்டீசு அனுப்பியும் அந்த கடை அகற்றப்படாததால் அந்த கடைக்கு சீல் வைக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் இறங்கினார்கள். இதைத்தொடர்ந்து இன்று காலை நாகர்கோவில் மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் விமலா, ஆய்வாளர்கள் மகேஸ்வரி, கெவின்ஜாய், துர்காதேவி, சந்தோஷ்குமார் ஆகியோர் அங்கு சென்றனர்.

அவர்கள் அந்த கவரிங் நகைக்கடையை பூட்டி சீல் வைத்தனர். இதுதொடர்பான நோட்டீசும் அந்த கடையின் முன்பு ஒட்டப்பட்டது. போலீஸ் பாதுகாப்புடன் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் அனுமதியின்றி செயல்படும் கடைகள், கட்டிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் நாகர்கோவில் பகுதியில் இதுதொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்துவார்கள் எனவும் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.