இறைச்சி கடை 
செய்திகள்

பூந்தமல்லியில் 4 இறைச்சி கடைகளுக்கு சீல்

பூந்தமல்லியில் தடையை மீறி இறைச்சி விற்பனை செய்த 4 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

மாலை மலர்

பூந்தமல்லி:

பூந்தமல்லி நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளது. இங்கு கடந்த சில தினங்களுக்கு முன் 6-வது வார்டில் தனியார் நிறுவன மேலாளர் மற்றும் வாலிபர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால் நகராட்சிக்குட்பட்ட 5 கிலோ மீட்டர் சுற்றி உள்ள அனைத்து பகுதிகளும் சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கிருமி நாசினி 21 வார்டுகளிலும் தெளிக்கப்பட்டு நகராட்சி அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டும், ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகின்றனர்.

இதனிடைய சில பகுதிகளில் தடையை மீறி இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நகராட்சி கமி‌ஷனர் வசந்தி தலைமையில் சுகாதார ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் பணியாளர்கள் லஷ்மிபுரம் மெயின் ரோடு மற்றும் சுமித்ரா நகர் பகுதிகளில் 4 கடைகளில் விற்பனை செய்வதை கண்டறித்து இறைச்சிகளை பறிமுதல் செய்து கடைகளுக்கு சீல் வைத்தனர்.