செய்திகள்

பெரம்பூரில் குத்தகை பாக்கி செலுத்தாத பெட்ரோல் நிலையத்துக்கு ‘சீல்’ வைப்பு

பெரம்பூரில் குத்தகை பாக்கி செலுத்தாத பெட்ரோல் நிலையத்துக்கு சென்னை கலெக்டர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

மாலை மலர்

பெரம்பூர்:

பெரம்பூர் ரெயில்வே நிலையம் எதிரே உள்ள வருவாய்த் துறைக்கு சொந்தமான நிலத்தில் கஸ்தூரி ஏஜென்சி என்கிற நிறுவனம், இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டு கடந்த 20 ஆண்டுகளாக பெட்ரோல் நிலையத்தை இயக்கி வந்தது.

இந்த பெட்ரோல் நிலையம், வருவாய்த்துறைக்கு சுமார் ரூ.1 கோடியே 80 லட்சம் குத்தகை பாக்கி வைத்திருந்ததாகவும், இது தொடர்பாக பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் குத்தகை பாக்கி செலுத்தவில்லை எனவும் தெரிகிறது.

இதையடுத்து, சென்னை கலெக்டர் உத்தரவின் பேரில் பெரம்பூர் தாசில்தார் நிலா, துணை வட்டாட்சியர் சரவணகுமார் மற்றும் வருவாய் அதிகாரிகள் சரோஜா, விக்ரம் ஆகியோர் நேற்று அந்த பெட்ரோல் நிலையத்துக்கு ‘சீல்’ வைத்தனர்.