களியக்காவிளை:
குமரி மேற்கு மாவட்ட கடற்கரை கிராமங்களில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றம் காணப்பட்டது.
தேங்காய்பட்டினம், முள்ளூர் துறை பகுதிகளில் நேற்று மாலை முதல் கடலில் ராட்சத அலைகள் எழுந்தன. அவை பனை மர உயரத்திற்கு எழுந்து மிரட்டியது.
மேலும் தூண்டில் வளைவையும் தாண்டி கடல் நீர் ஊருக்குள் வந்தது. இதனால் மீனவர்கள் கடும் பாதிப்புக்கு ஆளானார்கள்.
அரையன்தோப்பு மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் கடல் நீர் கரையை தாண்டி வந்ததால் அப்பகுதியில் தூண்டில் வளைவு சேதம் அடைந்தது. மேலும் அப்பகுதியில் உள்ள கடற்கரை சாலையும் அரித்து செல்லப்பட்டது.
இதன்காரணமாக தேங்காய்பட்டினத்தில் இருந்து அரையன்தோப்பு மற்றும் அதை சுற்றியுள்ள 8 கிராமங்கள் துண்டிக்கப்பட்டன.
தேங்காய்பட்டினம் அரையன்தோப்பு சாலை முற்றிலும் சேதம் அடைந்து விட்டதால் அந்த வழியாக தேங்காய்பட்டினம் செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டு விட்டன.
இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் பெரும் அவதிக்கு ஆளானார்கள். சேதமடைந்த சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும் என்றும் தூண்டில் வளைவில் பெயர்ந்து விழுந்த கற்களை மீண்டும் போட்டு தூண்டில் வளைவை சீரமைக்க வேண்டும் எனவும் இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது பற்றி மீனவர்கள் கூறும்போது, குமரி மேற்கு மாவட்ட கடல் பகுதியில் ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும். ஆனால் இம்முறை கடல் மிகவும் ஆக்ரோஷமாக காணப்படுகிறது. தூண்டில் வளைவுகள் சேதம் அடைந்து உள்ளன. அவற்றை சரி செய்தால் கடல் நீர் ஊருக்குள் வருவது தடுக்கப்படும். மேலும் சாலைகள் துண்டிப்பும் இருக்காது என்றனர்.