கம்பம்:
நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக நடைபயணம் மேற்கொண்ட வைகோ கம்பத்தில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் உலகளாவிய விஞ்ஞானிகள் அமைப்பின் உறுப்பினரும், கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்தவருமான விஞ்ஞானி பத்மநாபன் பங்கேற்று பேசினார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வைகோவின் கருத்துகளை மத்திய மாநில அரசுகள் அப்போதே கேட்டிருந்தால் இப்போது மக்கள் இந்த அளவுக்கு போராடும் நிலை வந்திருக்காது. அதே போல்தான் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க 2 லட்சம் டன்னுக்கும் அதிகமான பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்பட உள்ளது.
இதன் மூலம் இடுக்கி, தேனி மாவட்டத்தில் நீர் வளம், நில வளம் பாதிக்கப்படுவதுடன் 18 அணைகளுக்கு ஆபத்து உள்ளது. அப்பகுதி மக்கள் வாழ தகுதியற்ற பகுதியாக மாறும் அபாயமும் உள்ளது. இத்தாலியில் ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்ட ஒரே ஆண்டில் ஆபத்து ஏற்பட்டு அவற்றில் 14 பேர் உயிரிழந்தனர். 3 ஆண்டுகளாக அங்கு ஆய்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பொட்டிபுரத்திலும் ஆய்வு கூடம் அமைப்பதாலும் ஜெலட்டின் குச்சிகள் வைத்து பாறைகள் வெடிக்கப்படும் போது மிகப் பெரிய ஆபத்து ஏற்படும்.
இத்தாலியில் நியூட்ரினோ மையத்தில் இருந்து கசியும் தண்ணீரில் 60 வேதிப்பொருட்கள் கலந்து வருவதால் அதை மக்கள் பயன்படுத்த முடியவில்லை. அதே நிலைதான் பொட்டிபுரத்திலும் ஏற்படும். முல்லைப பெரியாறு அணை நீரில் ரசாயம் கலப்பு ஏற்பட்டு மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். இது மத்திய அரசுக்கும் தெரியும், கல்பாக்கம், கூடங்குளம் அணுக்கழிவுகளை அங்கேயே வைத்துக் கொள்ள முடியாது. அதை ஆழமான பகுதியில் புதைத்து வைக்க வேண்டும்.
தேனி மாவட்டமும் கேரள மாநிலமும் நில நடுக்கம் ஏற்படும் இடங்கள் குறித்த பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. இங்கு எப்போது வேண்டுமானாலும் நில நடுக்கம் ஏற்படலாம். மேலும் இப்பகுதி புவி அழுத்தம் நிறைந்த பகுதியாக உள்ளது. இதனால் தேனி, இடுக்கி மாவட்டத்தின் நில அமைப்பே மாறி விடும். இந்த திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். இத்திட்டத்துக்காக சட்ட விரோதமாக மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. அரசு திட்டத்தை கைவிடவில்லை என்றால் சட்ட ரீதியாக வழக்கு தொடர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். #Neutrinoplan