மாணவி ஹேமாவதி தவறி விழுந்த பஸ். 
செய்திகள்

தாளவாடி அருகே ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவி

தாளவாடி அருகே இன்று காலை ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவியை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தாளவாடி:

ஈரோடு மாவட்டம் தாளவாடி வனப்பகுதியில் உள்ள கல்மணடிபுரம். இந்த ஊரை சேர்ந்த மாதையன் என்பவரது மகள் ஹேமாவதி (வயது 17). இவர் தாளவாடி அருகே உள்ள பனகள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

வழக்கம் போல் இன்று காலை ஹேமாவதி அரசு பஸ்சில் பள்ளிக்கு புறப்பட்டார். பஸ்சில் 50- மாணவ - மாணவிகள் இருந்தனர். கல்மண்டிபுரத்தில் பஸ்சில் மாணவி ஏறி சிறிது நேரம் சென்ற போது ஒரு வளைவில் பஸ் திரும்பியது.

அப்போது பஸ்சின் உள்ளே நின்ற மாணவி ஹேமாவதி திடீரென நிலைகுலைந்து தவறி பஸ்சிலிருந்து கீழே விழுந்தார்.இதில் தலை மற்றும் உடலில் பலத்த அடிபட்ட மாணவியை மீட்டு தாளவாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து பொதுமக்கள் கூறும்போது, “இந்த பகுதியில் காலை நேரத்தில் அதிக மாணவ - மாணவிகள் பள்ளிக்கு செல்கிறார்கள். இதனால் கூட்டம் அதிகமாக உள்ளது. ஆகவே கூடுதல் பஸ் இயக்க வேண்டும்” என கேட்டு கொண்டுள்ளனர். 

SCROLL FOR NEXT