ஸ்ரீகாளஹஸ்தி:
ஆந்திரா மாநிலம் குப்பம் மல்லானூர் அடுத்த சதுமூரை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மனைவி பிரமிளா. அவர்களின் மகள் அனுராதா (வயது 15). இவர் அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
அதே பள்ளியில் மல்லானூர் இந்திராநகரை சேர்ந்த கோவிந்தசாமி (23) என்பவர் தற்காலிக கணித ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.
அவர் அனுராதாவிடம் தன்னை காதலிக்க வேண்டும் என கூறி பள்ளியிலும், வெளியிலும் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
கோவிந்தசாமியின் காதல் தொல்லையை தாங்க முடியாமல் அனுராதா தனது பெற்றோரிடம் கூறினார். பெற்றோரும், கோவிந்தசாமியை கண்டித்தனர். அத்துடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 முறை கிராம முக்கியஸ்தர்களின் முன்னிலையில் பஞ்சாயத்தை கூட்டி கோவிந்தசாமியை கண்டித்தனர்.
ஆனால் அவரின் போக்கில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அனுராதாவுக்கு தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். 2 நாட்களுக்கு முன்பு மது குடித்து விட்டு வந்த கோவிந்தசாமி அனுராதாவின் வீட்டுக்கு சென்று அவரிடமும், பெற்றோரிடமும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற அனுராதா பின்னர் நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வரவில்லை. சந்தேகமடைந்த குடும்பத்தினர் அப்பகுதியில் தேடினர். ஆனால் அவரை காணவில்லை.
இந்த நிலையில் அங்குள்ள விவசாய நிலத்தில் அனுராதா சுயநினைவின்றி கிடப்பதாக பெற்றோருக்கு தகவல் வந்தது.
சம்பவ இடத்துக்கு சென்ற பெற்றோர், அனுராதாவை மீட்டு குப்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
அவர் விஷம் குடித்து தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. அனுராதாவின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.
கணித ஆசிரியர் கோவிந்தசாமியின் காதல் தொல்லையால் தான், எங்களின் மகள் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டதாக அனுராதாவின் பெற்றோர் குப்பம் டவுன் போலீசில் புகார் செய்தனர்.
இன்ஸ்பெக்டர் ஜி.டி.நாயுடு, சப்-இன்ஸ் பெக்டர் நரேந்திரா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.