மரணம் 
செய்திகள்

களக்காடு அருகே பொத்தையில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவர் மரணம்

களக்காடு அருகே பொத்தையில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

மாலை மலர்

களக்காடு: 

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள நெடுவிளையை சேர்ந்தவர் வைகுண்டராஜா, விவசாயி. அவருடைய மனைவி சுயம்புகனி, இவர்களுக்கு 2 மகன்கள், 1 மகள் உள்ளனர். மூத்த மகன் ஆனந்த ராபின்சன் (வயது 13). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று அவர் அதே ஊரை சேர்ந்த நண்பர்கள் சிலருடன் ஊருக்கு அருகே உள்ள பொத்தையின் மீது புதர்களில் இருந்த தேன் கூட்டில் இருந்து தேன் எடுக்கச் சென்றார்.

பொத்தையில் ஏறியபோது ஆனந்த ராபின்சனை தேனீக்கள் கொட்டியது. இதில் நிலைதடுமாறிய அவர் பொத்தையில் இருந்து தவறி அடிவாரத்தில் இருந்த பாறையின் மீது விழுந்தார்.

இதில் தலை மற்றும் கை, கால்களில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.