நாகர்கோவில்:
தென்காசியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் சிவா என்ற சிவகுமார் (வயது 38). இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் உதவி சமையல் காரராக பணியாற்றி வந்தார்.
இந்த விடுதியில் நெல்லை அருகே உள்ள கங்கை கொண்டானைச் சேர்ந்த 11 வயது சிறுவன் தங்கியிருந்து 6-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த மாணவரும் இலங்கை அகதி ஆவார். இதனால் சிவகுமாரும், அந்த மாணவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. மாலை நேரங்களில் அவர்கள் 2 பேரும் சந்தித்து பேசினர். சம்பவத்தன்று 2 பேரும் பேசிக்கொண்டு இருந்தபோது திடீரென சிவகுமார், அந்த மாணவரிடம் அத்துமீறி செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
பாதிக்கப்பட்ட அந்த மாணவர் பள்ளி உதவி தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தார். அவர் இதுபற்றி நேசமணி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் இலங்கை அகதி சிவகுமார் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
சிவகுமாரை போலீசார் தேடிச் சென்றபோது அவர் தலைமறைவாகி இருந்தது தெரியவந்தது. அவர் தென்காசிக்கு தப்பிச் சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் அவரை கைது செய்ய போலீசார் தென்காசி விரைந்துள்ளனர்.