செய்திகள்

‘பத்மாவத்’ வன்முறை: கர்னி சேனா, 4 மாநில அரசுகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

பத்மாவத் படம் வெளியானதை ஒட்டி குஜராத், அரியானா உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் நடந்து வரும் வன்முறையை தடுக்க தவறிய மாநில அரசுகள் மற்றும் கர்னி சேனா அமைப்பு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

பாலிவுட் திரைப்படமான பத்மாவத் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே இன்று வெளியாக உள்ளது. ராஜ்புத் சமூகத்தை தவறாக இந்த படம் சித்தரித்ததாக கூறி கர்னி சேனா உள்ளிட்ட பல அமைப்புகள் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. படம் வெளியாக உள்ள தியேட்டர்கள் சூறையாடப்பட்டன. குஜராத், அரியானா, ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் மாநிலத்தில் இதனால் வன்முறை நிலவுகிறது.

மேற்கண்ட 4 மாநில அரசுகள் வன்முறையை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் உத்தரவு படி போதிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்காத 4 மாநில அரசுகள் மற்றும் கோர்ட் உத்தரவை மீறும் கர்னி சேனா அமைப்பு மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனித்தனியாக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் வரும் திங்களன்று தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான அமர்வு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தெஹ்சீன் பூனாவாலா மற்றும் வழக்கறிஞர் வினீத் தண்டா மேற்கண்ட மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இதற்கிடையே, பத்மாவத் படத்திற்கு வழங்கப்பட்ட சென்சார் சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இவ்விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் இருப்பதால் அங்கு முறையிட மனுதாரரை நீதிபதி அறிவுறுத்தி மனுவை தள்ளுபடி செய்தார்.