சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் 28–ந்தேதி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இதற்கு ஐயப்ப பக்தர்களும், இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும் மற்றும் பா.ஜனதா கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு மற்றும் ஐயப்பன் கோவிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டு மறுஆய்வு மனு தாக்கல் செய்யவில்லை. ஆனால், தீர்ப்பை எதிர்த்து தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே, சபரிமலை தீர்ப்புக்கு எதிராக 3 பேர் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த புதிய மனுக்களையும், சீராய்வு மனுக்களுடன் சேர்த்து விசாரிக்கும்படி கோரிக்கை வைத்தனர். ஆனால், அந்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், மறுஆய்வு மனுக்களை பரிசீலனை செய்து முடிவு செய்தபிறகு புதிய ரிட் மனுக்களை விசாரிப்பதாக கூறினர்.