செய்திகள்

கத்துவா சிறுமி கற்பழிப்பு வழக்கு விசாரணைக்கு மே 7-ம் தேதிவரை சுப்ரீம் கோர்ட் தடை

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கத்துவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கின் விசாரணைக்கு மே ஏழாம் தேதிவரை சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது.#Gangrape #Kathua

மாலை மலர்

புதுடெல்லி:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கத்துவா அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுபான்மயினச் சிறுமியை சிலர் கடத்திச் சென்று, மயக்க மருந்து அளித்து, வழிபாட்டு தலத்தில் வைத்து கூட்டாக கற்பழித்துக் கொடூரமான முறையில் கொன்றனர்.

நாட்டையே அதிரவைத்த இந்த சம்பவத்தை தொடர்ந்து பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் வெடித்தன.

இதன் எதிரொலியாக இவ்விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாகவே முன்வந்து விசாரணைக்கு உத்தரவிட்டது. வெகு தாமதமாக விசாரணையை தொடங்கிய ஜம்மு-காஷ்மீர் மாநில குற்றப்பிரிவு போலீசார் இச்சம்பவம் தொடர்பாக சிலரை கைது செய்தனர். கத்துவா மாவட்ட நீதிமன்றத்தில் 7 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

மேலும், ஒரு சிறுவன் மீதும் தனியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டவர்களில் இருவர் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில், கற்பழித்து கொல்லப்பட்ட சிறுமியின் தந்தை சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். தங்களது குடும்பத்துக்கும் இந்த வழக்கில் ஆஜராகும் குடும்ப நண்பரான வழக்கறிஞருக்கும் கொலை மிரட்டல் வருவதால் இந்த வழக்கின் விசாரணையை காஷ்மீர் மாநிலத்துக்கு வெளியே சண்டிகரில் உள்ள அரியானா மற்றும் பஞ்சாப் ஐகோர்ட்டில் நடத்த வேண்டும். மேலும், மாநில போலீசாரிடம் இருந்து இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் எனவும் தனது மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி திபக் மிஸ்ரா, டி.ஒய்.சந்திரசேகர், இந்து மல்ஹோத்ரா ஆகியோரை கொண்ட அமர்வின் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது. கத்துவா மாவட்ட கோர்ட்டில் நடைபெற்றுவரும் விசாரணைக்கு மே 7-ம் தேதி தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். #Gangrape #Kathua