கமல் நாத் 
செய்திகள்

கமல் நாத்தின் நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்து ரத்துக்கு இடைக்கால தடை

கமல் நாத்தின் நட்சத்திரப் பேச்சாளர் அந்தஸ்தை ரத்து செய்த தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

மத்தியப்பிரதேச மாநிலத்தில் நாளை மறுநாள் 28 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான  அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. 'தப்ரா' தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்துப் பேசிய அம்மாநில காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான  கமல்நாத், அதே தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் இமார்டி தேவியை பாலியல் ரீதியாகத் தரக்குறைவாகப் பேசினார். 

இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையான நிலையில், கமல்நாத்தின் நட்சத்திர பேச்சாளர் என்ற அந்தஸ்தை தேர்தல் ஆணையம் பறித்தது. இதனை எதிர்த்து கமல்நாத் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார்.

இந்த மனு இன்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கமல் நாத்தின் நட்சத்திர பிரச்சாரகர் அந்தஸ்தை ரத்து செய்த தேர்தல் ஆணைய உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும்,  "மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 77 வது பிரிவின் கீழ் ஒரு கட்சியின் தலைவர் யார் என்பதை தீர்மானிக்க தேர்தல் ஆணையத்திற்கு எங்கே அதிகாரம் உள்ளது?" என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

கமல் நாத்திற்காக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதாடினார்.