செய்திகள்

போலீஸ் அதிகாரி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: கேரள அரசுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் - சுப்ரீம் கோர்ட்டு

பதவி நீக்கம் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி சென்குமார் தொடர்ந்த கோர்ட் அவமதிப்பு வழக்கில் கேரள அரசுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிப்பதாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கேரளாவில் உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்த போது போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்தவர் சென்குமார். தேர்தல் முடிந்து பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணி ஆட்சி பொறுப்பேற்றதும் சென்குமார் டி.ஜி.பி. பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய மாணவி ஜிஷா கொலை வழக்கை சரியாக விசாரிக்கவில்லை என்றும், கோவில் வெடி விபத்தை தடுக்க தவறி விட்டதாகவும் கூறி அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

கேரள அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்குமார் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு சென்குமாருக்கு மீண்டும் பதவி வழங்க கடந்த மாதம் 24-ந்தேதி உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து அவர் தனக்கு மீண்டும் பதவி வழங்க வேண்டும் என்று கோரி இருந்தார். கோர்ட்டு உத்தரவை கேரளா தலைமை செயலாளருக்கு அனுப்பி வைத்து இருந்தார். ஆனாலும் கேரள அரசு அவருக்கு பதவி வழங்கவில்லை.

இதைத்தொடர்ந்து கேரள அரசு மீது சுப்ரீம் கோர்ட்டில் சென்குமார். கோர்ட்டு அவமதிப்பு வழக்கை கடந்த 29-ந்தேதி தொடர்ந்தார். இந்த மனுவை நீதிபதிகள் எம்.பி.லோக்கூர், தீபக்குப்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று விசாரித்தது.

கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்பாக கேரள தலைமை செயலாளர் நளினி நேட்டா விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் கேரள அரசுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.