செய்திகள்

லுக் அவுட் நோட்டீஸ் விவகாரம்: கார்த்தி சிதம்பரம் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்

லுக் அவுட் நோட்டீசை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

ஐ.என்.எஸ். மீடியாவுக்கு நிதித்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியதில் முறைகேடாக பணம் பெற்றதாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. குற்றம் சாட்டியுள்ளது. அவர் மீது அன்னிய செலாவணி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

வழக்கு விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் ஆஜராகாததால் அவரை அவரை தேடப்படும் நபராக  அறிவித்து, சி.பி.ஐ. லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டது. அவர் வெளிநாடுகளுக்கு செல்வதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதையடுத்து வெளிநாடு செல்வதற்கு அனுமதி கேட்டு கார்த்தி சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்ட நீதிபதிகள், கார்த்தி சிதம்பரம் கோரிக்கை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் முடிவு எடுக்கலாம் என தெரிவித்தனர்.

எனவே, கார்த்தி சிதம்பரம் வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதிப்பது குறித்து தகுதி மற்றும் தங்கள் அதிகார வரம்பிற்கு உட்பட்டு சென்னை உயர்நீதிமன்றம் முடிவு எடுக்கும். #tamilnews