செய்திகள்

2017-ம் ஆண்டுக்கான ஐ.ஐ.டி. கலந்தாய்வுக்கு தடை விதிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: மத்திய அரசுக்கு நோட்டீஸ்

2017-ம் ஆண்டுக்கான ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வு தகுதி பட்டியலை ரத்து செய்து, கலந்தாய்வுக்கு தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மத்திய அரசு மற்றும் ஐ.ஐ.டி. தேர்வாணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

மாலை மலர்

புதுடெல்லி:

ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வு தொடர்பாக வேலூரை சேர்ந்த மாணவர் விஷ்ணு பலராம் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் சார்பில் சென்னை வக்கீல் தங்க சிவன் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

2017-ம் ஆண்டுக்கான ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வில் இந்தி மொழியில் தவறாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சலுகை மதிப்பெண் வழங்குவதற்கு பதிலாக, அனைத்து மாணவர்களுக்கும் சலுகை மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வை சரியாக எழுதிய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வை நடத்தும் ஆணையத்துக்கு இரு கடிதங்கள் எழுதியும் எவ்வித நியாயமும் வழங்கப்படவில்லை.

எனவே 2017-ம் ஆண்டுக்கான ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வு தொடர்பான தகுதி பட்டியலை ரத்து செய்து மீண்டும் மதிப்பெண்களை சரியான முறையில் கணக்கிட உத்தரவிட வேண்டும். அதுவரை கலந்தாய்வுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் இந்த மனுவில் கூறப்பட்டது

இந்த மனு நீதிபதிகள் ஏ.எம்.சப்ரே, சஞ்ஜய் கிஷன் கவுல் ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் தங்க சிவன், இந்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மற்றும் ஐ.ஐ.டி. தேர்வாணையம் ஆகியவை சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டனர். பின்னர் இந்த வழக்கு 7-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.