செய்திகள்

வங்கிக் கணக்குகளுடன் ஆதாரை இணைப்பதற்கு எதிரான திரிணாமுல் காங். எம்.எல்.ஏ. மனு தள்ளுபடி

வங்கிக் கணக்குகளுடன் ஆதார் விவரங்களை இணைப்பதற்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.

ஆதார் எண் முதலில் கொண்டு வந்த போது, நாட்டில் நடைபெற்று வரும் குற்றங்களை தடுப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களை மத்திய அரசு கூறியது. சமூக நல திட்டங்களுக்கு இது கட்டாயமாக்கப்படாது என்று முதலில் மத்திய அரசு தெரிவித்தது. ஆனால் படிப்படியாக பல்வேறு அரசின் திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.

இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவ்வழக்குகள் அனைத்தும் சுப்ரீம் கோர்ட்டின், 5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு சட்ட அமர்வு விசாரித்து வருகிறது.

இந்நிலையில், ஆதார் எண்ணை வங்கிக் கணக்குகளுடன் இணைக்கும் நடவடிக்கையை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.  மஹூவா மோயித்ரா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால், அந்த மனுவை இன்று நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷன் ஆகியோர் கொண்ட அமர்வு பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டது.

மனுவை ஆராய்ந்த நீதிபதிகள், இதனை தனி வழக்காக விசாரிக்க முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

‘ஏற்கனவே, ஆதார் தொடர்பாக பல்வேறு வழக்குகள் உள்ளன. ஒரே பிரச்சினைக்காக ஆயிரக்கணக்கான மனுக்களை ஏன் விசாரிக்க வேண்டும்? இந்த பிரச்சினையை அரசியலமைப்பு அமர்வில் முறையிட்டு, ஆதார் வழக்குகளில் உங்களையும் ஒரு வாதியாக இணைத்துக்கொள்ளலாம்’ என நீதிபதிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT