பொன் மாணிக்கவேல் 
செய்திகள்

சிலை கடத்தல் ஆவணங்களை ஒரு வாரத்தில் ஒப்படையுங்கள் - பொன் மாணிக்கவேலுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் ஒரு வாரத்திற்குள் ஒப்படைக்க வேண்டும் என்று பொன் மாணிக்கவேலுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

புதுடெல்லி:

தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட கோவில் சிலைகளை மீட்பதற்காக பொன்.மாணிக்கவேல் தலைமையில் தனிப்பிரிவு அமைக்கப்பட்டிருந்தது. இதற்காக அவருக்கு பணி நீடிப்பு வழங்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே, பொன் மாணிக்கவேலின் பணிக்காலம் 30-ம் தேதியுடன் நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பொன் மாணிக்கவேலுக்கு தமிழக உள்துறை செயலாளர் உத்தரவிட்டிருந்தார்.

ஆனால், ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவு இல்லாமல் ஆவணங்களை ஒப்படைக்க முடியாது என்று பொன் மாணிக்கவேல் கூறியிருந்தார்.

இதுதொடர்பான வழக்கில், சிலை கடத்தல் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் உயர் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு  கடந்த 4-ம் தேதி உத்தரவிட்டது.

இதையடுத்து, தன்னால் விசாரிக்கப்பட்ட சிலை கடத்தல் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் சிடி வடிவில் உள்ளதாகவும், அவை தொகுத்து விரைவில் ஒப்படைக்கப்படும் என்று பொன்மாணிக்கவேல் விளக்கம் அளித்திருந்தார். 

இந்நிலையில், பொன்.மாணிக்கவேல் மீது சுப்ரீம் கோர்ட்டில்  தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு  நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு, சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை ஒரு வாரத்திற்குள் தமிழக அரசிடம் ஒப்படைக்க பொன் மாணிக்கவேலுக்கு உத்தரவு பிறப்பித்தது.

மேலும், ஆவணங்களை ஒப்படைத்தது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு, இந்த வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தது.