புதுடெல்லி:
காவிரி நதி நீர்ப்பங்கீடு தொடர்பாக காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பபை எதிர்த்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்துள்ளன. இந்த மனுக்கள் மீதான இறுதிக்கட்ட விசாரணை கடந்த மாதம் 11-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கர்நாடக அரசு மற்றும் கேரள அரசின் வாதங்களைத் தொடர்ந்து தமிழக அரசும் தனது வாதத்தை முன்வைத்தது.
அப்போது, தமிழக அரசு ஏன் புதிய அணைகளைக் கட்டக்கூடாது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். புதிய அணைகளை கட்டும் அளவுக்கு தமிழகத்தில் புவியியல் அமைப்பு இல்லை என தமிழக அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவா ராய், ஏ.எம். கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் காவிரி வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இன்று தொடர்ந்து வாதாடிய தமிழக அரசு வழக்கறிஞர், காவிரி படுகைகள் தமிழகத்தில் குறைவாக இருந்தாலும், மக்கள் தொகை தமிழகத்தில் தான் அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் கர்நாடகா அரசு கேட்கும் தண்ணீரைக் கொடுத்தால், தமிழகத்திற்கு கொஞ்சம் கூட தண்ணீர் கிடைக்காத சூழ்நிலை ஏற்படும் என்றும் அவர் வாதிட்டார்.
இதையடுத்து நீர் மேலாண்மையின் அவசியம் குறித்து வலியுறுத்திய நீதிபதிகள், தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரள அரசுகளின் வல்லுநர்களை அழைத்து வரும்படி உத்தரவிட்டனர். அவர்கள் தங்கள் வாதங்களை எடுத்து வைக்க தலா 45 நிமிடங்கள் அவகாசம் வழங்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.