ஜம்மு காஷ்மீரில் பாஜக-பிடிபி கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஜூன் மாதம் பாஜக தனது ஆதரவை விலக்கிக்கொண்டது. ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லாததால் முதல்வர் மெகபூபா முப்தி ராஜினாமா செய்தார். அதன்பிறகு எந்த கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோராததால் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
ஆளுநர் ஆட்சி டிசம்பர் 18-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், கடந்த மாதம் பிடிபி, தேசிய மாநாட்டுக் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்க முயற்சி செய்தது. இதேபோல் 2 உறுப்பினர்களை மட்டுமே கொண்ட மக்கள் மாநாட்டுக் கட்சி, பாஜக மற்றும் பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்கும் முயற்சியில் இறங்கியது.