சுப்ரீம் கோர்ட்டில், டிராபிக் ராமசாமி தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில், கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந்தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். பின்னர் 10-க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் எஸ்டேட்டில் புகுந்து பல முக்கிய ஆவணங்களை திருடிச் சென்றனர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து, ஜெயலலிதாவின் கார் டிரைவராக இருந்த கனகராஜ் உள்பட 5 பேர் அடுத்தடுத்து இறந்தனர்.
இவர்கள் விபத்தில் இறந்ததாக சொன்னாலும், அது சந்தேகத்துக்கு இடமான ஒன்றாகவே இருந்தது. மேலும் சம்பவம் குறித்த விசாரணை நீதிமன்றத்தில் தற்போது வரை நிலுவையில் இருந்து வருகிறது.
இந்நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக கடந்த வாரம் தெகல்கா இணைய தள முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் டெல்லியில் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டார்.
எனவே, இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஜி.எஸ்.மணி ஆஜராகி வாதிட்டார்.