செய்திகள்

கலவரமாக மாறும் எஸ்.சி., எஸ்.டி. போராட்டம் - அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் செய்த திருத்தங்களை எதிர்த்து இன்று நடைபெறும் போராட்டம் கலவரமாக மாறியுள்ளது பற்றி அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு பாதுகாப்பளிக்கும் சட்டமாக இருக்கும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் சுப்ரீம் கோர்ட் சில திருத்தங்கள் செய்து உத்தரவிட்டிருந்தற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள சுமார் 150 தலித் அமைப்புகள் சார்பில் இன்று போராட்டம் நடத்தி வருகின்றன.

குறிப்பாக வட மாநிலங்களின் பல பகுதிகளில் நடந்துவரும் போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ளன.

உத்தரப்பிரதேசத்தின் முசாபர் நகர் பகுதியில் பேருந்து, கார் உள்ளிட்டவை போராட்டக்காரர்களால் கொளுத்தப்பட்டன. குஜராத், ராஜஸ்தான் மற்றும் அரியானா மாநிலங்களில் பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

பஞ்சாப் மாநிலத்தில் ரெயில்கள் மறிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கலவரம் நடந்துவரும் இடங்களில் எல்லாம் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் குவாலியர், ப்ஹிந்த், மோரேனா மற்றும் சாகர் பகுதிகளில் நடந்த போராட்டம் கலவரமாக மாறிய நிலையில், அங்கு கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இதில் நால்வர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு பாதுகாப்பளிக்கும் சட்டமாக இருக்கும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் சுப்ரீம் கோர்ட் செய்த திருத்தங்கள் தொடர்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் சுமார் 150 தலித் அமைப்புகளை உள்ளடக்கிய அகில இந்திய எஸ்.சி., எஸ்.டி. கூட்டமைப்பின் சார்பில் இன்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இன்றைய தலித் மக்களின் போராட்டம் கலவரமாக மாறியுள்ளதை சுட்டிக்காட்டி அவசர வழக்காக இந்த மனுவின் மீது விசாரணை நடத்த வேண்டும் என்றும் மனுதாரரின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இதை ஏற்றுக்கொள்ள மறுத்த சுப்ரீம் கோர்ட், வரிசைக்கிரமத்தின்படி இம்மனுவின் மீதான விசாரணை நடைபெறும் என தெரிவித்துள்ளது. #Tamilnews