செய்திகள்

நிதிஷ்குமார் பதவியை பறிக்க வழக்கு - விசாரணைக்கு ஏற்றது சுப்ரீம் கோர்ட்

பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் சட்டமன்ற மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட் இன்று விசாரணைக்கு ஏற்றது.

மாலை மலர்


புதுடெல்லி:

1991ம் ஆண்டு பீகாரின் பார்ஹ் மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலின்போது ஏற்பட்ட மோதலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சீதாராம் சிங் என்பவர் கொல்லப்பட்டார், மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நிதீஷ்குமார் உட்பட சிலர் மீது அப்போது கொலை, கொலைமுயற்சி ஆகிய கிரிமினல் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

இந்நிலையில், தன் மீதுள்ள குற்ற வழக்கை மறைத்த நிதிஷ்குமாரின் சட்ட மேலவை உறுப்பினர் பதவியை பறிக்க வேண்டும் என எம்.எல்.சர்மா என்ற வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். 

நிதிஷ்குமார் தன் மீதான கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளதை மறைத்து சட்டமேலவை தேர்தலில் போட்டியிட்டு வென்றது செல்லாது என அறிவித்து அவரது பதவியை பறிக்க வேண்டும் என அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், இந்த வழக்கில் நிதிஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்ய சி.பி.ஐ.க்கு உத்தரவிடுமாறு வழக்கறிஞர் கூறியுள்ளார். 

இந்த மனுவை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதாவா ராய், ஏ.எம்.கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு பரிசீலனை செய்தது. பின்னர் மனுவை விசாரணைக்கு ஏற்பதாக நீதிபதிகள் அறிவித்தனர். பட்டியலிடப்படும் நாளில் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.