செய்திகள்

காஷ்மீர் மக்களுக்கு சிறப்புரிமை: தீபாவளிக்கு பின்னர் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நிரந்தரமாக வசித்து வருபவர்களுக்கு சிறப்புரிமை வழங்கும் அரசியலமைப்பு சட்டம் தொடர்பான வழக்கின் விசாரணையை தீபாவளிக்கு பின்னர் தொடங்க சுப்ரீம் கோர்ட் தீர்மானித்துள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நிரந்தரமாக வசித்து வருபவர்களுக்கு சிறப்புரிமை வழங்கும் அரசியலமைப்பு சட்டம் தொடர்பான வழக்கின் விசாரணையை தீபாவளிக்கு பின்னர் தொடங்க சுப்ரீம் கோர்ட் தீர்மானித்துள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் சாரு வாலி கண்ணா என்பவர் தொடர்ந்த ஒரு வழக்கில், ‘இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 35ஏ மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநில அரசியல் சாசன விதி 6-ன் கீழ் அம்மாநில மக்களுக்கு நிரந்தரக் குடியுரிமை சான்றிதழ் அளிக்கப்படுகிறது. இப்பிரிவு பெண்களுக்கு பாதகமாக அமைந்துள்ளது. அம்மாநில பெண் ஒருவர் நிரந்தரக் குடியுரிமை சான்றிதழ் இல்லாத வேறு மாநிலத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்தால் அவருக்கு சொத்துரிமை மறுக்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு உரிமையும் மறுக்கப்படுகிறது. அவரது மகனுக்கும் சொத்துரிமை மறுக்கப்படுகிறது. நிரந்தர குடியுரிமை சான்று இல்லாத ஒருவரால் மக்களவை தேர்தலில் வாக்களிக்க முடியும். சட்டப்பேரவை, உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க முடியாது. பாரபட்சமான இந்தப் பிரிவை ரத்து செய்ய வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, டி.ஒய்.சந்திரசூட் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கான்வில்கர் அடங்கிய அமர்வின் முன்னர் இம்மனு விசாரணைக்கு வந்தது. ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு சலுகை அளித்துள்ள பிரிவு செல்லுமா, செல்லாதா அல்லது சலுகை அளித்ததில் சட்ட நடைமுறைகள் மீறப்பட்டுள்ளதா? என்பது குறித்து தேவைப்பட்டால் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும்.

இதேபோன்ற மனுக்கள் ஏற்கெனவே 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கையும் அந்த அமர்வு விசாரிக்கும். தேவைப்பட்டால் கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு அனுப்புவது குறித்து 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முடிவெடுக்கும்’ என்று தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கை ஏற்கெனவே உள்ள வழக்குகளுடன் சேர்த்து விசாரிக்க உத்தரவிட்டனர். இம்மாத இறுதியில் இவ்வழக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஜம்மு-காஷ்மீர் மாநில அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ராகேஷ் திவேதி மற்றும் ஷோஹேப் ஆலம் ஆகியோர் இவ்வழக்கின் விசாரணையை தீபாவளி பண்டிகைக்கு பின்னர் வைத்து கொள்ளலாம் என்று கேட்டுக் கொண்டனர்.

இதையடுத்து, மேற்படி வழக்கின் விசாரணை தீபாவளிக்கு (அக்டோபர் 18) பின்னர் நடைபெறும் என சுப்ரீம் கோர்ட் இன்று தெரிவித்துள்ளது.