செய்திகள்

மினிமம் பேலன்ஸ் குறைவுக்கான அபராதத்தை 70 சதவீதம் வரை குறைத்தது எஸ்.பி.ஐ.

சேமிப்புக்கணக்கில் குறைந்தப்பட்ட இருப்புத்தொகை இல்லாதவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு வந்த அபராதம் 70 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. #SBI

மாலை மலர்

பாரத ஸ்டேட் வங்கி தங்கள் வாடிக்கையாளர்களில் சேமிப்புக்கணக்கில் குறைந்தப்பட்ட இருப்புத்தொகை இல்லாதவர்களிடம் சென்ற ஆண்டு முதல் அபராதம் வசூலித்து வருகிறது.

பெரு நகரங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்த பட்சம் 5,000 ரூபாய், நகர்புறங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் 3,000 ரூபாய், சிறு நகரங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் ரூ.2,000 மற்றும் கிராமப்புறங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் 1,000 ரூபாயை குறைந்தபட்ச தொகையாக இருப்பு வைத்திருக்க வேண்டும்.

எவ்வளவு தொகை குறைவாக இருக்கிறதோ, அந்த தொகைக்கு ஏற்ப அபராதம் விதிக்கப்படுகிறது. குறைந்தபட்ச தொகையில் 75 சதவீதம் பற்றாக்குறை இருந்தால் 100 ரூபாய் மற்றும் சேவை வரி செலுத்த வேண்டும்.

50 சதவீதம் முதல் 75 சதவீத பற்றாக்குறை இருந்தால் 75 ரூபாயுடன் கூடுதல் வரி, 50 சதவீதத்துக்கு கீழ் பற்றாக்குறை இருந்தால் 50 ரூபாயுடன் சேவை வரி செலுத்த வேண்டும். கிராமப்புற பகுதிகளில் குறைந்தபட்ச தொகை இல்லை எனில் ரூ.20 முதல் 50 வரை அபராதம் மற்றும் சேவை வரி செலுத்த வேண்டும். இதன் அடிப்படையில் மாதந்தோறும் அபராதம் வசூலிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், அபராதத்தொகையை 70 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. மெட்ரோ போன்ற பெரு நகரங்களில் 75 சதவீதம் பற்றாக்குறை  உள்ளவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு வந்த தொகையானது 50 ரூபாயிலிருந்து 15 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. சிறு நகரங்களில் அபராத தொகை 40 லிருந்து 12 ரூபாயாகவும், கிராமப்புறங்களில் 10 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.


75 சதவீதத்திலிருந்து 50 சதவீதம் பற்றாக்குறை உள்ளவர்களுக்கு மெட்ரோ போன்ற பெரு நகரங்களில் வசூலிக்கப்பட்டு வந்த தொகையானது 40 ரூபாயிலிருந்து 12 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. சிறு நகரங்களில் அபராத தொகை 30 லிருந்து 10 ரூபாயாகவும், கிராமப்புறங்களில் 7.5 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

50 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பு உள்ளவர்களுக்கு மெட்ரோ போன்ற பெரு நகரங்களில் வசூலிக்கப்பட்டு வந்த தொகையானது 30 ரூபாயிலிருந்து 10 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. சிறு நகரங்களில் அபராத தொகை 20 லிருந்து 7.5 ரூபாயாகவும், கிராமப்புறங்களில் 5 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது.


இந்த அபராதங்களுடன் சேவை வரியும் செலுத்த வேண்டும். இது ஏப்ரல் மாதல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க எடுக்கப்பட்டுள்ளது. இதனால் 25 கோடி வாடிக்கையாளர்கள் பயன்பெறுவர் என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். #SBI #tamilnews