சயன் 
செய்திகள்

கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சயனிடம் போலீஸ் சூப்பிரண்டு 2 மணி நேரம் விசாரணை

கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் சயனிடம் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா 2 மணி நேரம் விசாரணை நடத்தினார். சயனின் மாமனார் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

மாலை மலர்

கோவை:

நீலகிரி மாவட்டம் கொடநாடுஎஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொலை, கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் விபத்தில் பலியானார். அவருடைய கூட்டாளியான சயன் மற்றொரு விபத்தில் படுகாயம் அடைந்தார். அவர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மர்ம நபர்கள் யாரும் ஆஸ்பத்திரிக்குள் சென்றுவிடக்கூடாது என்பதற்காக அங்கு ஏராளமான போலீசார் மாறுவேடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது சயனின் உடல்நிலை தேறி வருவதாக கூறப்படுகிறது.

கொடநாடுசம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா சயன் சிகிச்சை பெற்று வரும் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு அவர் சயனிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தினார். பின்னர் அவர், சயனின் உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர் போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா நிருபர்களிடம் கூறியதாவது:-

தற்போது சயன் உடல்நிலை தேறிவருவதாக டாக்டர்கள் கூறினார்கள். அவர் கொஞ்சமாக பேச தொடங்கி உள்ளார். இன்னும் சரிவர பேச முடியாததால், அவரிடம் முழுமையாக விசாரணை நடத்த முடியவில்லை. நாங்கள் கேட்ட ஒருசில கேள்விகளுக்கு தன்னால் முடிந்த அளவுக்கு பதில் அளித்தார். அவர் குணமடைந்த பின்னர் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்படும்.

கனகராஜ் இறந்துவிட்டதாலும், சயன் படுகாயம் அடைந்ததாலும் விசாரணையில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. விசாரணை தற்போது நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 2 பேரை தீவிரமாக தேடி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சயனின் மாமனார் சிவசங்கரன் (வயது 52) வீடு கோவை யை அடுத்த மதுக்கரை சுப்பிரமணியபுரத்தில் உள்ளது. நேற்று மாலை தனிப்படை போலீசார் சிவசங்கரனின் வீட்டிற்கு சென்று, அங்கு ஏதாவது தடயங்கள் கிடைக்கிறதா? என்று சோதனை செய்தனர்.

இந்த சோதனை அரை மணி நேரம் நடந்தது. சோதனையில் எவ்வித தடயங்களும் போலீசாருக்கு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து போலீசார் சிவசங்கரனிடம் விசாரணை நடத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

கேரள மாநிலம் அரக்காடு போலீசார் ஒரு மோசடி வழக்கில் திருச்சூரை சேர்ந்த ஜிதின்ராய் (19), வயநாட்டை சேர்ந்த ஜம்ஷீர் அலி (32) ஆகியோரை கைது செய்தனர். கொடநாடுஎஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளையில் அவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து கொள்ளைக்கு பயன்படுத்திய ஒரு காரையும் போலீசார் கைப்பற்றினர்.

எனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்த 2 பேரையும் நீலகிரி மாவட்ட போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்தனர். இதற்காக கேரளா சென்ற போலீசார் மலப்புரம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து 2 பேரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி பெற்றனர். அவர்கள் 2 பேரையும் பலத்த பாதுகாப்புடன் நீலகிரிக்கு அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.