இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஜோகன்னஸ்பர்க்கில் கடந்த 11-ந்தேதி தொடங்கியது. தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 262 ரன்களும், பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 185 ரன்களும் சேர்த்தன. தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 303 ரன்கள் குவித்தது.
இதனால் பாகிஸ்தான் வெற்றிக்கு 381 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது தென்ஆப்பிரிக்கா. 381 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 3 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்திருந்தது.
ஆசாத் ஷபிக் 48 ரன்னுடனும், பாபர் ஆசம் 17 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கியதும் ஆசாத் ஷபிக் அரைசதம் அடித்தார். மறுமுனையில் பாபர் ஆசம் 21 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் சர்பிராஸ் அகமது ரன்ஏதும் எடுக்காமல் முதல் பந்திலே ஆட்டமிழந்தார். அரைசதம் அடித்த ஆசாத் ஷபிக் 65 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஷபிக் ஆட்டமிழந்ததும் பாகிஸ்தான் தோல்வி உறுதியானது. பஹீம் அஷ்ரப் 15 ரன்னிலும், முகமது அமிர் 4 ரன்னிலும், ஹசன் அலி 22 ரன்னிலும், முகமது அப்பாஸ் 9 ரன்னிலும் ஆட்டமிழக்க பாகிஸ்தான் 273 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் தென்ஆப்பிரிக்கா 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சதாப் கான் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.