டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. தென்ஆப்பிரிக்கா கேப்டன் டு பிளிசிஸ், நாங்கள் டாஸ் வென்றிருந்தாலும் பீல்டிங்தான் தேர்வு செய்திருப்போம் என்றார்.
ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னர், கேமரூன் பான்கிராப்ட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். நியூ பந்த் ஸ்விங் ஆகியதால் பிலாண்டர், ரபாடா ஆகியோர் பந்து வீச்சில் நெருக்கடி கொடுத்தார். ஆனால் வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் ரன்கள் அடிக்காவிடிலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். முதல் 7 ஓவரில் 7 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.
8-வது ஓவரை ரபாடா வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் பான்கிராப்ட் பவுண்டரி அடித்தார். இதுதான் ஆஸ்திரேலியாவின் முதல் பவுண்டரி.
13-வது ஓவர் வரை ஆஸ்திரேலியா 18 ரன்கள் எடுத்தது. அதன்பின் வார்னர், பான்கிராப்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நெகிடி வீசிய 16-வது ஓவரில் இரண்டு பவுண்டரிகளும், ரபாடா வீசிய 17-வது ஓவரில் மூன்று பவுண்டரிகளும், நெகிடி வீசிய 18-வது ஓவரில் இரண்டு பவுண்டரிகளும் விளாசினார்கள்.