செய்திகள்

விலைவாசி உயர்வை சமாளிக்க 1000 ரியால் உதவிப்பணம்: சவுதி மன்னர் உத்தரவு

சவுதி அரேபியாவில் எரிபொருள் விலையேற்றம், வாட் வரி போன்றவற்றால் கிடுகிடுவென்று அதிகரித்துவரும் விலைவாசி உயர்வை சமாளிக்க அரசுப் பணியாளர்களுக்கு மாதந்தோறும் 1000 ரியால் உதவிப்பணம் அளிக்க மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார்.

மாலை மலர்

ரியால்:

எண்ணெய் வளம் மிக்க வளைகுடா நாடுகளான சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அமீரக அரசுகளின் வருமானத்தின் பெரும் பகுதி எண்ணெய் ஏற்றுமதி மூலமாக வருகிறது. வருமான வரி மற்றும் இதர பொருட்களின் மீதான வரிகள் விதிக்கப்படாத நிலை இத்தனை காலமும் மேற்கண்ட நாடுகளில் இருந்து வந்தது.

இந்நிலையில், பெட்ரோலிய பொருட்களின் விலைகள் சர்வதேச சந்தையில் சரிவடைந்ததால் சவுதி அரேபியாவில் நலிவடைந்துவரும் பொருளாதாரத்தை நிமிர்த்திட பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் தொடங்கியுள்ளது. உணவுப்பொருட்கள், துணிமணிகள், மின்னணு பொருட்கள், தொலைபேசி கட்டணம், தண்ணீர், மின்சார கட்டணம், ஓட்டல் புக்கிங் ஆகியவற்றுக்கு 5 சதவிகிதம் அளவுக்கு புதிய வாட் (மதிப்பு கூட்டு) வரி 1-1-2018 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால், நாளுக்குநாள் அங்கு விலைவாசி உயர்ந்து வருகிறது. கிடுகிடுவென்று அதிகரித்துவரும் விலைவாசி உயர்வை சமாளிக்க அரசுப் பணியாளர்களுக்கு மாதந்தோறும் 1000 ரியால் உதவிப்பணம் அளிக்க சவுதி மன்னர் சல்மான் நேற்று உத்தரவிட்டுள்ளார். இந்த உதவிப்பணம் ராணுவத்தில் பணியாற்றுபவர்களுக்கும் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், மாணவ-மாணவிகளுக்கான உதவித்தொகையில் 10 சதவீதம் அளவுக்கு உயர்த்தி வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.