செய்திகள்

சத்துவாச்சாரியில் குடிநீர் கேட்டு சாலை மறியல்

சத்துவாச்சாரி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் காலிகுடங்களுடன் சாலை மறியல் செய்தனர்.

மாலை மலர்

வேலூர்:

வேலூர் மாநகராட்சி பகுதியில் காவிரி குடிநீர் குழாய் உடைப்பு காரணமாக குடிநீர் சப்ளையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

சில பகுதியில் வாரம் ஒரு தடவை சப்ளை செய்யபடுகிறது. பல இடங்களில் குடிநீர் சப்ளை செய்யவேஇல்லை. சத்துவாச்சாரி தஸ்தகீர் தெருவில் 15 நாட்களாக குடிநீர் சப்ளை செய்யவில்லை. இதனால் பாதிக்கபட்ட அப்பகுதி பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை சத்துவாச்சாரி பஸ் நிறுத்தம் அருகே காலிகுடங்களுடன் சாலை மறியல் செய்தனர்.

இது பற்றி தகவலறிந்த சத்துவாச்சாரி போலீசார் விரைந்து சென்று பொதுமக்களை சமரசம் செய்தனர்.

இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இது பற்றி பொதுமக்கள் கூறியதாவது:-

எங்கள் தெருவில் 15 நாட்களாக குடிநீர் வரவில்லை. பக்கத்து தெருக்களில் வாரம் ஒரு தடவை தண்ணீர் சப்ளையாகிறது. குடிநீரை நீண்ட நாட்களாக தேக்கி வைத்திருப்பதால் கொசு புழுக்கள் உற்பத்தியாகிறது.

உடனடியாக எங்கள் பகுதிக்கு குடிநீர் சப்ளை செய்ய வேண்டும் என்றனர்.