உயிரிழந்த தந்தை, மகன் 
செய்திகள்

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்- வழக்கை விசாரணைக்கு ஏற்றது சி.பி.ஐ.

சாத்தான்குளத்தில் போலீசாரால் தாக்கப்பட்ட தந்தை, மகன் மரணம் குறித்த வழக்கை விசாரிக்க சிபிஐ ஒப்புதல் அளித்துள்ளது.

மாலை மலர்

சென்னை:

சாத்தான்குளத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கு சிபிஐ மூலம் விசாரிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டது. 

சிபிஐ விசாரணையை தொடங்கும் வரை சிபிசிஐடி விசாரிக்கும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்தது. அதன்படி விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி, இதுவரை 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

இந்த நிலையில், சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணை நடத்த ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த வழக்கை சிபிஐ ஏற்கும்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.