சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராஜன் உடல் நலக்குறைவால் கடந்த மாதம் 20-ந் தேதி காலமானார். அவரது உடல் சென்னையில் இருந்து தஞ்சை அருளானந்த நகரில் உள்ள அவருடைய வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்கு செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா 15 நாட்கள் பரோலில் வந்தார். தஞ்சை வந்த அவர் கணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்றார். பின்னர் தஞ்சை அருளானந்த நகரில் உள்ள நடராஜன் வீட்டில் தங்கி இருந்தார். அவரை உறவினர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் சந்தித்து ஆறுதல் கூறினர்.