சென்னை:
சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டுக்கு எதிரே 8 கிரவுண்டு இடம் சசிகலாவுக்கு சொந்தமானது என்றும் பினாமி பெயரில் இந்த இடம் வாங்கப்பட்டுள்ளதாக கூறி வருமான வரித்துறையினர் முடக்கி வைத்துள்ளனர்.
இதற்காக அந்த இடத்தில் கட்டப்பட்டு வரும் பங்களா வீட்டு முன்பு வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று நோட்டீஸ் ஒட்டி சென்றனர்.
அந்த நோட்டீசில் பினாமி சட்டத்தின்கீழ் இந்த சொத்து முடக்கப்பட்டுள்ளதாகவும் இனி இந்த சொத்தின் உரிமையாளர் இதனை விற்க முடியாது என்றும் 90 நாட்களுக்குள் சொத்து சம்பந்தமாக உரிமையாளர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.
போயஸ் கார்டன் வீடு தவிர சசிகலாவின் சொத்துக்கள் பல இடங்களில் முடக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து இடத்துக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அந்த நோட்டீசின் பிரதிகள் சிறையில் இருக்கும் சசிகலா மற்றும் சொத்துக்களை பதிவு செய்த சார்பதிவாளர் உள்ளிட்டோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சசிகலாவின் வக்கீல் ராஜாசெந்தூர் பாண்டியன், மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-
இந்த விஷயத்தில் வருமான வரித்துறையினர் நடந்து கொண்ட விதம் மிகவும் தவறாகும். இதை நாங்கள் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்.
வருமான வரித்துறையினர் போயஸ் கார்டனில் கட்டப்பட்டு வரும் ஒரு வீட்டை சசிகலாவின் பினாமி வீடு என்று எப்படி சொல்கிறார்கள் என்று தெரியவில்லை.
ஏனென்றால் அந்த இடம் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீஹரிசந்திரா என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமானதாகும்.
2013-2014-ம் ஆண்டு காலக்கட்டத்தில் இது வாங்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் சசிகலா பங்குதாரராக உள்ளார். ஒருவர் ஒரு கம்பெனியில் பங்குதாரராக சேர்ந்தால் அந்த கம்பெனியின் சொத்து, அவரது சொத்தாக எப்படி மாறும்?
இந்தியாவில் எத்தனையோ கம்பெனிகள் உள்ளன. அந்த கம்பெனியில் யார் வேண்டுமானாலும் பங்குதாரராக சேருவார்கள். அப்படி சேர்ந்தால் அந்த கம்பெனியின் சொத்தை அவரது சொத்து என்று எப்படி கூற முடியும்?
ஒருவர் செலவு செய்த பணத்திற்கு முறையாக கணக்கு காட்டவில்லை என்றால்தான் வருமான வரித்துறையினர் நுழைய முடியும். இதில் பங்குதாரர் மீது தவறு என்றால் ரிஜிஸ்திரார் ஆப் கம்பெனி என்ற துறைதான் நடவடிக்கை எடுக்க முடியும்.
ஸ்ரீஹரிசந்திரா நிறுவனம் போயஸ்கார்டனில் வீடு கட்டுவதற்கு முறைப்படிதான் விண்ணப்பித்து அனுமதி பெற்றுள்ளது.
எனவே வருமான வரித்துறை அதிகாரிகள் தவறாக புரிந்து கொண்டு இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த வழக்கை 11 மாதங்களாக கையாண்டு வரும் ஒரு அதிகாரி 10 மாதம் கழித்து பினாமி சொத்து என்று குற்றம் சாட்டுகிறார்.
இதற்கு சட்டம் இடம் கொடுக்காது. எங்களது பதிலை 90 நாட்களுக்குள் உரிய அதிகாரியிடம் சமர்ப்பிப்போம். அந்த பதிலை ஏற்காத பட்சத்தில் நாங்கள் நீதிமன்றத்துக்கு செல்வோம். கண்டிப்பாக நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து விடும்.
நான் சசிகலாவின் வழக்கறிஞராக சொல்ல விரும்புவது சசிகலாவுக்கோ அல்லது எங்களுக்கோ இதுவரை நோட்டீஸ் நகல் கிடைக்கவில்லை. ஊடகங்களில் வந்த செய்தியை வைத்து நோட்டீஸ் ஒட்டப்பட்டதாக அறிகிறேன்.
சசிகலா எப்படியும் இந்த மாத இறுதிக்குள் (செப்டம்பர்) வெளியே வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அவர் போயஸ்கார்டனில் புது வீடு கட்டிதான் குடியேற வேண்டும் என்ற அவசியம் இல்லை. வாடகைக்கு கூட வீடு எடுத்து தங்க முடியும்.
எனவே வருமான வரித்துறையினர் தவறான புரிதலுடன் நடவடிக்கை எடுத்து இருப்பதாக அறிகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.