சென்னை:
சசிகலாவின் கணவர் நடராஜன் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை கிளெனேகல் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உறுப்பு மாற்று அறுவை செய்ய டாக்டர்கள் தீர்மானித்தனர்.
இந்நிலையில், சென்னை கிளெனேகல் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
நேற்று மூளைச்சாவு நிலையை எட்டிய தஞ்சாவூர் வாலிபர் கார்த்திக் என்பவரது உடலுறுப்புகளை தானமாக அளிக்க அவரது உறவினர்கள் முன்வந்தனர். அதன்படி, கார்த்திக்கின் இயங்கும் நிலையில் உள்ள உடலுறுப்புகள் அகற்றப்பட்டன.
அவற்றில் கல்லீரலும், சிறுநீரகமும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் நடராஜனுக்கு பொறுத்தப்பட்டது. இதயம் தமிழ்நாட்டைச் சேர்ந்த 43 வயது நபருக்கு பொருத்தப்பட்டது. கார்த்திக்கின் மற்றொரு சிறுநீரகம் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவருக்கு பொறுத்தப்பட்டது.
இந்த அறுவை சிகிச்சைகள் அனைத்தும் வெற்றிகரமாக நடைபெற்றன. அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் மூவரும் நலமுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை தினகரன் தரப்பு வட்டாரங்களும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.