சசிகலா 
செய்திகள்

செல்லாத ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காக ரூ.237 கோடி கடன் கொடுத்த சசிகலா

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது செல்லாத ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காக சசிகலா, அரசு காண்டிராக்டர்களுக்கு ரூ.237 கோடி கடன் கொடுத்தது வருமான வரித்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது சசிகலா, தன்னிடம் இருந்த செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக பல்வேறு தந்திரங்களை கையாண்டது வருமான வரித்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த காலகட்டத்தில் ரூ.1,674.50 கோடி மதிப்புள்ள சொத்துக்களை வாங்கி குவித்தார். 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி முதல் டிசம்பர் 30-ந்தேதி வரை இந்த பணபரிமாற்றம் நடந்துள்ளது.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது. இந்த காலகட்டத்தில் சசிகலா தன்னிடம் இருந்த பழைய நோட்டுகளை மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். இது 2017-ம் ஆண்டு நவம்பர் 9-ந்தேதி வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் தெரிய வந்தது.

எந்த எந்த சொத்துக்களை யாரிடம், எவ்வளவு தொகைக்கு வாங்கினார் என்பதும், இதில், பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் எவ்வளவு கைமாறியது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. சசிகலாவின் நெருங்கிய உறவினர் சிவகுமார் மூலம் பல்வேறு பணபரிமாற்றங்கள் நடந்துள்ளது.

சொத்துக்கள் வாங்கியது தவிர வேறு விதமாகவும் செல்லாத பணத்தை புதிய நோட்டாக மாற்ற ஏற்பாடு செய்துள்ளார். பலருக்கு இந்த பணத்தை பைனான்ஸ் செய்து அதில் இருந்து வட்டி பெற ஏற்பாடு செய்யப்பட்டதும் தெரிய வந்துள்ளது.

அரசு காண்டிராக்டர்கள் தங்கள் தொழிலுக்கு முன்பணமாக கடன் பெறுவது உண்டு. இதை பயன்படுத்தி சசிகலா, அரசு காண்டிராக்டர்களுக்கு ரூ.237 கோடியை பழைய நோட்டுகளாக கொடுத்துள்ளார்.

அரசு கட்டிடங்கள், அரசு உதவி பெறும் பள்ளி கட்டிடங்கள் மற்றும் அரசு டெண்டர்களை எடுத்த காண்டிராக்டர்களுக்கு ரூ.240 கோடி கடனாக கொடுக்க பேரம் பேசப்பட்டது. இதில் ரூ. 237 கோடி ரூபாய் செல்லாத ரூபாய் நோட்டுகளாக கொடுக்கப்பட்டது.

இந்த பணத்துக்கு ரூ.7.5 கோடி கமி‌ஷனாக பெறப்பட்டது. பணத்தை ஒரு வருடத்துக்குள் திருப்பித் தர வேண்டும். தாமதமானால் 6 சதவீத வட்டி வழங்க வேண்டும் என்ற ஒப்பந்தப்படி இந்த பணம் கொடுக்கப்பட்டது.

SCROLL FOR NEXT