இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக சசிகலா அணி தரப்பில் வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் டெல்லி தலைமை தேர்தல் கமிஷனில் நேற்று எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்தனர்.
தேர்தல் கமிஷனால் முடக்கி வைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெற, ஆளும்கட்சி அணியினரும், சசிகலா அணியினரும் கடுமையான முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். ஏற்கனவே லட்சக்கணக்கில் பிரமாண பத்திரங்களை தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்த அவர்கள், தேர்தல் கமிஷன் உத்தரவுக்கு இணங்க கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் தங்களுக்கு ஆதரவான எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பட்டியலையும் சமர்ப்பித்தனர்.
இது தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, அக்டோபர் 31-ந் தேதிக்குள் இந்த வழக்கை விசாரித்து முடிக்குமாறும் பின்னர் இது தொடர்பான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நவம்பர் 10-ந் தேதிக்குள் தேர்தல் கமிஷன் விசாரித்து முடிக்கவும் உத்தரவிட்டது.
கடந்த வாரம் இரு அணியினரும் தங்கள் தரப்பு வாதங்களை தேர்தல் கமிஷனில் நேரடியாக எடுத்துரைத்தனர். அப்போது, சின்னத்துக்கு உரிமை கோருவது தொடர்பாக எழுத்துப்பூர்வ வாதங்களை நவம்பர் 13-ந் தேதிக்குள் இரு தரப்பினரும் சமர்ப்பிக்கவேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.அதன் அடிப்படையில் ஆளும் கட்சி சார்பில் அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று பிற்பகல் 2 மணி அளவில் எழுத்துப்பூர்வ வாதங்களை தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
இது போன்ற வழக்குகளில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் யாரிடம் பெரும்பான்மையாக இருக்கிறார்களோ அவர்களுக்கே சின்னம் வழங்கப்படவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது. அகிலேஷ் யாதவ் வழக்கில் அப்படித்தான் தீர்ப்பு கூறப்பட்டது. அதன் அடிப்படையில் பெரும்பான்மையாக உள்ள எங்களுக்கே இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
வருமான வரித்துறை சோதனை மத்திய அரசு சம்பந்தப்பட்டது. வரலாற்றில் இல்லாத அளவுக்கு சோதனை நடப்பதாக கூறுகிறீர்கள், வரலாற்றில் இல்லாத அளவுக்கு சம்பந்தப்பட்டவர்களின் ராஜ்ஜியம் இருந்திருக்கிறது. அதனால் அப்படி சோதனை நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து சசிகலா அணி தரப்பில் வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் மாலை 4 மணி அளவில் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்தார்.