தஞ்சாவூர்:
தஞ்சையில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜெயலலிதா இறந்து 1 ஆண்டு ஆகியும் கட்சி சார்பில் இதுவரை எந்த நிகழ்ச்சிகளும் நடத்தப்படவில்லை. அ.தி.மு.க.வில் 2,500 பேச்சாளர்கள் உள்ளனர். அவர்கள் வீட்டில் அடுப்பு கூட எரியவில்லை. பொதுச்செயலாளர், துணைப்பொதுச்செயலாளரை விலக்கி வைக்க வேண்டும் என்று யாரும் நிர்ப்பந்தம் கொடுப்பதாக தெரியவில்லை. கட்சி நன்றாக இருக்க வேண்டும் என்பது தான் எங்களது நோக்கம்.
ஓ.பன்னீர்செல்வம் மட்டும் அல்ல அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் எங்கள் பங்காளிகள் தான். எங்களுக்குள் சண்டையும் வரும், சமரசம் வரும். தற்போதைய செயல்பாடுகளால் தொண்டர்கள் மட்டும் அல்ல, நாங்களும் குழம்பித்தான் உள்ளோம். தெளிவான வழி விரைவில் பிறக்கும். அ.தி.மு.க. எங்கு இருக்கிறது. தொண்டர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது விரைவில் தெரியும். மீதமுள்ள நான்கு ஆண்டுகள் ஆட்சி நிலைப்பது என்பது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்களின் நடவடிக்கையில் தான் உள்ளது.
ஆட்சியை விட கட்சியை காப்பாற்றி மீட்டெடுப்பது தான் எங்களது முதல்வேலை. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கூட அ.தி.மு.க. சார்பில் நடத்தப்படவில்லை. அரசு சார்பில் தான் நடக்கிறது. கட்சிக்குள் உள்ள நெருக்கடியை நாங்கள் சமாளிப்போம். இந்த ஆட்சி 4 ஆண்டுகளுக்கு நீடிக்கும். எங்களால் ஆட்சிக்கு எந்த பிரச்சினையும் வராது.
பதவி வந்தவுடன் குணங்கள் மாறுவது இயல்பு. எங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை மேலூர் கூட்டத்தில் தெரியும். மேலூர் உள்பட 9 இடங்களில் நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்துக்குப் பிறகு நாங்கள் யார் என்பது தெரியும். சசிகலா எங்கு இருக்கிறாரோ, அங்குதான் அ.தி.மு.க. இருக்கிறது என்பதில் தொண்டர்கள் உறுதியாக உள்ளனர். இரு அணிகளும் இணைவதற்கு அவகாசம் அளித்தோம். அவர்கள் இணையவில்லை. நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்ற அச்சத்தில் இணைகின்றனர். இணைந்தால் மகிழ்ச்சிதான்.
இவ்வாறு அவர் கூறினார்.