பெங்களூரு:
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து தரப்பட்டு இருந்தன.
இதுதொடர்பாக சிறையில் ஆய்வு நடத்தி டி.ஐ.ஜி. ரூபா அறிக்கையை சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயணராவிடம் தாக்கல் செய்து இருந்தார்.
இந்த அறிக்கை மீது அவர் நடவடிக்கை எடுக்காததால் சசிகலாவுக்கு சிறையில் சொகுசு வசதிகள் செய்து தர டி.ஜி.பி. சத்தியநாராயண ராவ் ரூ.2 கோடி லஞ்சம் வாங்கியதாக டி.ஐ.ஜி. ரூபா குற்றம் சாட்டி இருந்தார்.
இதுகுறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணை அறிக்கையை கர்நாடக உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைத்தார். அந்த அறிக்கையில். டி.ஐ.ஜி. ரூபாவின் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் உண்மை என்றும் கூறியிருந்தார். ஆனால், ரூ.2 கோடி லஞ்சம் வாங்கிய விவரம் குறித்து அவர் அறிக்கையில் எதுவும் குறிப்பிடவில்லை.
இதுகுறித்து ஊழல் தடுப்பு படை போலீசார் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் வினய்குமார் தனது அறிக்கையில் கூறியிருந்தார்.
ரூ.2 கோடி லஞ்ச விவகாரம் குறித்து கர்நாடக மாநில ஊழல் தடுப்பு படை போலீசார் விசாரணைக்கு அந்த மாநில உள்துறை உத்தரவிட்டுள்ளது.
கடந்த 26-ந் தேதியே ஊழல் தடுப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கி விட்டனர். முதற்கட்டமாக முன்னாள் டி.ஐ.ஜி. ரூபாவின் அறிக்கையை அவர்கள் ஆதாரமாக கொண்டு வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும், சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் சிறையில் இருந்து வெளியே ஷாப்பிங் சென்று வந்ததை பார்த்ததாக கூறிய முத்து மாணிக்கம் என்பவரின் வாக்குமூலத்தை ஆதாரமாக பதிவு செய்தனர்.
இதன் அடிப்படையில் ஓய்வு பெற்ற சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயணராவ், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை தலைமை சூப்பிரண்டாக இருந்த கிருஷ்ணகுமார், மகளிர் சிறை சூப்பிரண்டாக இருந்த அனிதா ஆகியோர் மீது ஊழல் தடுப்பு சட்டம் 1988 -ன் கீழ் வழக்கு பதிவு செய்ய ஊழல் தடுப்பு படை போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் கர்நாடக உள்துறை மந்திரி ராமலிங்க ரெட்டியை சிறைத்துறை டி.ஜி.பி. மேக்ரிக் மற்றும் ஊழல் தடுப்பு படை உயர் அதிகாரிகள் சந்தித்து இந்த வழக்கு விசாரணை தொடர்பாக ஆலோசனை நடத்தினார்கள். #tamilnews #sasikala #digRoopa ##DGPSatyanarayanaRao