சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் பிரதமர் மோடி 
செய்திகள்

இன்று 144வது பிறந்த நாள்- சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை

சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை முன்னிட்டு, குஜராத் மாநிலம் கெவாடியா கிராமத்தில் உள்ள அவரது சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

மாலை மலர்

அகமதாபாத்:

இந்தியாவின் இரும்பு மனிதரும், சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை மந்திரியுமான சர்தார் வல்லபாய் படேலின் 144-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவரது சொந்த மாநிலமான குஜராத்தின் கெவாடியா கிராமத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் அங்கு படேல் பிறந்தநாள் கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது ஒற்றுமை உறுதிமொழியை பிரதமர் மோடி வாசிக்க, அனைவரும் திரும்ப சொல்லி உறுதிமொழி ஏற்றனர்.

படேல் பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் ஒற்றுமை ஓட்டம் நடத்தப்படுகிறது. மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, முதல்வர் பட்னாவிஸ் ஆகியோர் மும்பையில் ஒற்றுமை ஓட்டத்தை துவக்கி வைத்தனர். 

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த ஒற்றுமை ஓட்டத்தில் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பங்கேற்றார். அரியானாவின் பஞ்சகுலா அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்ற ஒற்றுமை ஓட்டத்தை முதல்வர் மனோகர்லால் கட்டார் துவக்கி வைத்தார். 

சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலம், நர்மதை மாவட்டத்தின் கெவாடியா என்ற கிராமத்தில் நர்மதை நதிக்கரையோரம் 182 மீட்டர் (597 அடி) உயரத்தில் பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டு உள்ளது. 

இது உலகிலேயே உயரமான சிலை ஆகும். அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையை விட இரண்டு மடங்கு உயரம் கொண்டது. இச்சிலைக்கு ஒற்றுமைக்கான சிலை என பெயர் சூட்டப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.