செய்திகள்

சென்னையில் இன்று ஓ.பன்னீர்செல்வத்துடன் சரவணன் எம்.எல்.ஏ. சந்திப்பு

சென்னையில் இன்று ஓ.பன்னீர்செல்வத்துடன் சரவணன் எம்.எல்.ஏ. சந்தித்து பேசினார். அப்போது பணபேர வீடியோ பற்றி அவர் விளக்கம் அளித்தார்.

சென்னை:

அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா அணி சார்பில் அம்மா கல்வியகம் தொடங்கப்பட்டுள்ளது. அதில் பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

அங்கு படித்த மாணவ, மாணவிகள் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றனர். அவர்களுக்கு பரிசளிப்பு விழா இன்று தி.நகரில் நடந்தது.

அதில், அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா அணியின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். விழாவில் அவர் பேசியதாவது:-

‘‘மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கல்விப் பணிக்காக மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு நல்ல திட்டங்களை வழங்கினார். இலவச சைக்கிள், லேப்-டாப் உள்ளிட்டவற்றை இலவசமாக வழங்கி கல்வியை ஊக்குவித்தார்.

அவரது வழியில் ‘‘அம்மா கல்வியகம்’’ தொடங்கப்பட்டுள்ளது. அதில் மாணவ, மாணவிகள் கல்வி பயில்கின்றனர். தொடங்கப்பட்ட குறுகிய காலத்தில் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இனிவரும் காலங்களில் அம்மா கல்வியகத்தில் ‘ஐ.ஏ.எஸ்’ அகாடமி தொடங்கப்படும். மேலும் வங்கி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் அரசு பணியிடங்களுக்கான தேர்வு பயிற்சியும் தொடங்கப்படும்’’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மதுசூதனன், பொன்னையன், நத்தம் விசுவநாதன், மா.பா.பாண்டியராஜன், அம்மா கல்வியகத்தின் ஒருங்கிணைப்பாளர் சாமிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூவத்தூரில் தங்கியிருந்த சசிகலா அணி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.6 கோடி பேரம் குறித்து தனியார் டி.வி.யில் சரவணன் எம்.எல்.ஏ. பேசியதாக ஒளிபரப்பான ரகசிய வீடியோ காட்சி பற்றி ஓ.பன்னீர்செல்வத்திடம் நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த அவர், சரவணன் எம்.எல்.ஏ.விடம் அது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அவரிடம் இருந்து விளக்கம் வந்த பிறகு தான் இது குறித்து கருத்து கூற முடியும் என்றார்.

இந்த நிலையில் சரவணன் எம்.எல்.ஏ. மதுரையில் இருந்து அவசரமாக விமானத்தில் சென்னை புறப்பட்டு வந்தார். இன்று மதியம் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டில் சரவணன் எம்.எல்.ஏ. அவரை சந்தித்து பேசினார். இந்த பணபேர வீடியோ பற்றி அவர் விளக்கம் அளித்தார்.

SCROLL FOR NEXT