மண்டபம் இடிந்து விழுந்ததில் பலியான பெண்ணின் குடும்பத்திற்கு சரத்குமார் நிதிஉதவி வழங்கி ஆறுதல் கூறிய காட்சி. 
செய்திகள்

ஆர்.கே.நகரில் அ.தி.மு.க. வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது: சரத்குமார்

இரட்டை இலை சின்னம் கிடைத்திருப்பதால் ஆர்.கே.நகரில் அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என சரத்குமார் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 14-ந்தேதி இடிந்து விழுந்த கிரிபிரகார மண்டபத்தை சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று இரவு பார்வையிட்டார். பின்னர் மண்டபம் இடிந்து விழுந்துபலியான பேச்சியம்மாள் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அவர்களது மகள் சுமதி, மகன் சுரேஷிற்கு நிவாரண நிதியாக ரூ.10 ஆயிரம் வழங்கினார். படிப்பு செலவிற்கு உதவி செய்வதாக சரத்குமார் கூறினார்.

முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள், விவசாயிகள் இழப்புகள் குறித்து நேரில் பார்வையிட்டு இழப்புகள் குறித்து கேட்டறிந்தேன். திருச்செந்தூர் கோவிலில் மண்டபம் இடிந்த இடத்தில் புதிய மண்டபம் கட்ட வேண்டும்.

ஆர்.கே.நகரில் இடைத்தேர்தலை நடத்துவது தேர்தல் ஆணையத்தின் கடமை. அங்கு ஏற்கனவே நடந்த இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தற்போது ஜனநாயக முறைப்படி இடைத்தேர்தலை நடத்துகிறது. இந்நிலையில் பணப்பட்டுவாடா நடப்பதாக கூறியிருக்கின்றனர். இது தேர்தல் ஆணையம் சரியாக நடக்கவில்லையா என மக்கள் மத்தியில் ஆழமான கருத்து ஏற்பட்டு விடும்.

எனவே ஆர்.கே.நகர் தேர்தலை தேர்தல் ஆணையம் நியாயமாகவும் நேர்மையாகவும், ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும். அ.தி.மு.க.,வுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்திருப்பதால் அக்கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கட்டாயம் உள்ளாட்சி தேர்தலை நடத்தியே ஆக வேண்டும். அப்போது தான் லோக்கல் டிபார்மெண்ட் சரியாக வேலை செய்ய துவங்கும்.

எங்கள் இயக்கம் கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க., கூட்டணியில் பயணித்து விட்டோம். தற்போது எங்களது கட்சி கொள்கை, கோட்பாடுகளை மக்களிடம் நேரடியாக சுயமாக சொல்வதற்காக நாங்கள் மக்களை சந்தித்து வருகிறோம். எங்களது நியாயமான கருத்துக்களை தெரிவித்து வருகிறோம். எங்களது கட்சியின் வளர்ச்சிகாகவும், பலத்தை அறியவும் நேரடியாக பயணம் செய்து வருகிறோம்.

இவ்வாறு சரத்குமார் கூறினார்.