செய்திகள்

ரே‌ஷன் கடையில் உளுந்தம்பருப்பு வழங்க வேண்டும்: சரத்குமார் கோரிக்கை

ரே‌ஷன் கடைகளில் உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு தங்கு தடையின்றி விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் சரத்குமார் கூறி உள்ளார்.

சென்னை:

சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழக அரசு, பொது விநியோகத் திட்டத்தின் கீழ், நியாய விலைக் கடைகளில், சமீபத்தில் சர்க்கரையின் விலையை அதிகரித்ததையடுத்து, பொது மக்களின் அதிருப்தியை சந்திக்க நேரிட்டது.

இதன் தொடர்ச்சியாக, அதிர்ச்சி அளிக்கும் விதமாக கடந்த பல மாதங்களாக, உளுத்தம் பருப்பும், துவரம் பருப்பும் விநியோகிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

உளுந்தம்பருப்பு விற்கப்படாது என்ற அறிவிப்பை வெளியிட்ட உணவுத்துறை அமைச்சர், துவரம் பருப்புக்குப் பதிலாக மசூர் பருப்பு விநியோகிக்கப்படும் என்பதையும் அறிவித்துள்ளார்.

வெளிச்சந்தையை விட, குறைந்த விலையில் உளுத்தம் பருப்பு, துவரம்பருப்பு போன்ற பருப்பு வகைகள், ரே‌ஷன் கடைகளில் கிடைத்து வந்தது ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு உதவிகரமாக இருந்து வந்துள்ளது.

தற்சமயம் இவை ரே‌ஷன் கடைகளில் விநியோகிக்கப்படாதது, இவர்களை மிகுந்த சிரமத்திற்கு ஆளாக்கும். இந்நிலையில், உணவுத்துறையும், கூட்டுறவுத் துறையும் தங்களுக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டிப் பேசிவருவதும் ஏற்புடையதல்ல.

எனவே, ரே‌ஷன் கடைகளில் உளுத்தம் பருப்பும், துவரம் பருப்பும் தங்கு தடையின்றி விநியோகிக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும் ஊட்டச்சத்து குறைபாடுகளை நீக்குவதாகவும், விவசாயத் தொழிலை ஊக்கப்படுத்தும் விதமாகவும், சிறுதானிய வகைகளையும், குறைந்த விலையில் விநியோகிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT