செய்திகள்

சங்கரன்கோவில் விசைத்தறி தொழிலாளர்கள் தொடர்ந்து 10-வது நாளாக வேலை நிறுத்தம்

விசைத்தறிக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரி விதிப்பை ரத்து செய்யக்கோரி நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலில் விசைத்தறி உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் இன்று 10-வது நாளாக தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாலை மலர்

சங்கரன்கோவில்:

விசைத்தறிக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரி விதிப்பை ரத்து செய்யக்கோரி நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலில் விசைத்தறி உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் இன்று 10-வது நாளாக தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக ரூ.25 கோடி மதிப்பிலான சேலை உள்ளிட்டவை ஏற்றுமதி செய்ய முடியாமல் தேங்கி உள்ளன.

சங்கரன்கோவிலில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் சுமார் 10 ஆயிரம் பேர் வேலை செய்கின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் வேட்டி-சேலை, கைக்குட்டைகள் தமிழகத் தின் பிரபல ஜவுளி நிறுவனங்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும், ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில் விசைத்தறி தொழிலுக்கு விதிக்கப் பட்டிருக்கும் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை ரத்துசெய்யக்கோரி விசைத்தறி உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கடந்த 5-ந் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உண்ணாவிரதம், பேரணி, ஆர்ப்பாட்டம் போன்ற பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. நேற்று முன்தினம் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன பேரணி நடத்தினர். தொடர்ந்து இன்று 10-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் வீதம் இன்று 10-வது நாளாக 10 கோடி ரூபாய் உற்பத்தி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்டுள்ள ரூ.25 கோடி மதிப்பிலான சேலைகள் ஏற்றுமதி செய்யமுடியாமல் முடங்கி கிடக்கிறது.