சென்னை:
மணல் விற்பனையை அரசே நேரடியாக விற்பனை செய்வதால் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குறைந்த அளவு குவாரிகள் மூலம் தினமும் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் மணல் லோடுகள் மட்டுமே வினியோகிக்கப்படுகிறது.
இதன் மூலம் தேவையை பூர்த்தி செய்ய முடியாததால் மணல் விலை பல மடங்கு அதிகமாக உயர்ந்துள்ளது.
2 யூனிட் மணல் ரூ.1080-க்கு அரசு வழங்கிய போதிலும் பொது மக்களுக்கு ரூ.27,000-க்கு விற்கப்படுகிறது. அதே போல 3 யூனிட் மணல் ரூ.1,600-க்கு அரசு வழங்கிய போதிலும் மணல் விற்பனையாளர்கள் ரூ.40 ஆயிரத்திற்கு விற்கிறார்கள். மணல் தேவையான அளவு கிடைக்காததால் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி முதல் ஆன்லைன் மூலம் மணல் விற்கும் திட்டத்தை அரசு அறிவித்தது. மணல் தேவைப்படுவோர் ஆன்-லைனில் பதிவு செய்தால் வழங்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து நேற்று வரை 30 ஆயிரம் லோடுகளுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
400 பேர் பொது மக்களும், 29 ஆயிரத்து 600 பேர் மணல் லாரி உரிமையாளர்களும் பதிவு செய்து காத்திருக்கின்றனர். மணல் வினியோகம் சீரடையாததால் கட்டுமான தொழில்களும், அத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் மணல் லாரி உரிமையாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள், செங்கல், ஜல்லி விற்பனையாளர்கள், பில்டர்ஸ் ஆகியோர் ஒருங்கிணைந்து நாளை (6-ந்தேதி) ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். மேலும் சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதமும் இருக்கிறார்கள். உண்ணாவிரத போராட்டத்திற்கு பில்டர்ஸ் அசோசியேஷன் முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார்.
மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் எஸ்.யுவராஜ் முன்னிலை வகிக்கிறார். உண்ணாவிரதத்தை வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் விக்கிரமராஜா தொடங்கி வைக்கிறார். அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் முன்னாள் தலைவர் சண்முகப்பா முடித்து வைக்கிறார். இதில் கட்டிட தொழிலாளர் சங்க தலைவர் பொன்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள்.
இதுகுறித்து மணல் லாரி உரிமையாளர் சங்க கூட்டமைப்பு தலைவர் எஸ்.யுவராஜ் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் 85 மணல் குவாரிகளை திறக்க வேண்டும். அப்போது தான் தினமும் 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் மணல் லோடுகள் அனுப்ப முடியும். மணல் தாராளமாக கிடைக்கும் போது பொது மக்களுக்கு குறைவான விலையில் கிடைக்கும். மணல் வினியோகத்தை அதிகப்படுத்தினால்தான் விலை குறையும். இத்தொழிலை நம்பி 25 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். அதனால் அரசு உடனே கூடுதலாக மணல் குவாரிகளை திறந்து அதிகமான அளவு மணல் லோடுகளை வழங்க வலியுறுத்தி நாளை வேலை நிறுத்தமும், உண்ணாவிரத போராட்டமும் நடக்கிறது என்றார்.