தா.பேட்டை:
திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகே கண்ணனூர் அய்யாற்று பகுதி கிராமங்களில் மணல் திருடப்படும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் தா.பேட்டை அருகே கண்ணனூர் பொன்னம்பலம்பட்டி கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி சிங்காரவேலன் (வயது 26) என்பவர் நேற்றுமுன்தினம் இரவு மருக்கலாம்பட்டி குண்டாறு பகுதியில் திருட்டுத் தனமாக மணல் அள்ளுவதற்காக கண்ணனூரை சேர்ந்த பிரபு (32), அஜீத் (28), சுரேந்தர் (30), சிங்காரவேலன் (26) ஆகியோருடன் சென்றார்.
அவர்கள் மணலை திருடி டிராக்டரில் ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக மணல் திட்டு சரிந்து அவர்கள் மீது விழுந்தது. இதில் சிக்கி சிங்காரவேலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சுரேந்தர் படுகாயம் அடைந்தார். அவர்களுடன் வந்தவர்கள் சிங்காரவேலன் உடலை மீட்டு பொன்னம்பலம்பட்டி கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டுசென்று உறவினரிடம் ஒப்படைத்தனர். சுரேந்தர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டார். இதுதொடர்பாக ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிங்காரவேலன் உடலை கைப்பற்றி துறையூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், மணல் திருட்டில் ஈடுபட்டதாக பிரபு என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது.